திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஆறாம் திருமுறை |
6.8 திருக்காளத்தி - திருத்தாண்டகம் |
விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்
பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்
பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற
கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே.
|
1 |
இடிப்பான்காண் என்வினையை ஏகம் கன்காண்
எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.
|
2 |
நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவா யன்ன
பூரணன்காண் புண்ணியன்கான் புராணன் றான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் றான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் றான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாங்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே.
|
3 |
செற்றான்காண் என்வினையைத் தீயா டிகாண்
திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார்க்
குற்றார்காண் ஏகம்பம் மேவி னான்காண்
உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ்
சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே.
|
4 |
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.
|
5 |
எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
ஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்
புரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண்
நல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு
நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற
கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.
|
6 |
கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.
|
7 |
இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்
இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்
வில்லாடி வேடனா யோடி னான்காண்
வெண்ணூ லுஞசேர்ந்த அகலத் தான்காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழிருந்த காபா லிகான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.
|
8 |
தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்
திருவேகம் பத்தான்காண் தேனார்ந் துக்க
ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண்
நம்பன்காண் ஞானத் தொளியா னான்காண்
வானப்பே ரூரு மறிய வோடி
மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக்
கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.
|
9 |
இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் றான்காண்
குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்
மறையுடைய வானோர் பெருமான் றான்காண்
மறைக்காட் டுறையும் மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் காபா லிகான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.
|
10 |
உண்ணா வருநஞ் முண்டான் றான்காண்
ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப்
பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண்
பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்
அண்ணா மலையான்காண் அடியா ரிட்டம்
அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்
கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |